ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏராளமானோர் வந்துசெல்கின்றனர்.
மாவட்டத்தில் தற்போது வரை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 846 நபர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாவட்டம் முழுவதிலும் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருந்ததால், சிறப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
சமூக இடைவெளியை மறந்த மக்கள்
நேற்று முன்தினம் (ஜூலை.02) 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்ததை அறிந்த மக்கள், நேற்று (ஜூலை.03) ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள காலை 8 மணி முதலே குவியத் தொடங்கினர்.
தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திச்சென்றனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மக்கள் மிகவும் நெருக்கமாக நின்று தடுப்பூசி செலுத்திச் சென்ற காட்சி காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது மீண்டும் கரோனா பரவலுக்கு வழிவகுக்கலாம் என மருத்துவர்களும், சுகாதாரத் துறையினரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ''மதுரை எய்ம்ஸ் அடுத்தகட்ட நகர்வு' - ஒன்றிய அமைச்சரிடமிருந்து பதில்'