முதுகுளத்தூரில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஆர். பி உதயகுமார், “30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு நிறைவேறியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி காட்டினார். ஆனால் திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் மன்றத்தை புறக்கணித்து சென்றனர். அதுமட்டுமன்றி விவசாயிகளின் நலன் காக்க 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் மதிப்பில் பயிர் காப்பீடு கடனை ரத்து செய்தார். மின்னல் வேகத்தில் அரசு நிர்வாகம் செயல்பட்டுவருகிறது.
நீர் மேலாண்மையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே பாராட்டியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை தற்போது மக்கள் மத்தியில் கொண்டுவந்து செயல்படுத்தியவர் பழனிசாமி. இந்த ஆட்சியானது மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் தீர்வு காண முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்.
மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக 1100 என்ற எண்ணை அறிமுகப்படுத்தினார். 38 வருவாய் மாவட்டங்களிலும் கரோனா காலத்தில் எனது உயிரைவிட மக்கள் நலனே முக்கியம் என அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் குறைதீர்க்கும் முகாம் என்ற போர்வையில் பெட்டிக்குள் பெட்டி வைத்து பூட்டு போட்டுவிட்டு அதனை அறிவாலயத்தில் கொண்டுபோய் வைப்பார்களாம்.