இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கருங்கலக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான மான் கொம்புகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதுகுளத்தூர் அருகே உள்ள கருங்கலக்குறிச்சி கண்மாய் பகுதியில் வாழ வந்தாள் அம்மன் கோயில் எதிரில் பண்ணைக்குட்டை தோண்டியபோது, அதிகளவில் பானை ஓடுகள் வெளி வந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் அக்கண்மாய்ப் பகுதியில் ஆசிரியர் சண்முகநாதனுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது, "பண்ணைக் குட்டை தோண்டிய பகுதியில், ஒரு நுண் கற்காலக் கருவி, வழுவழுப்பான மற்றும் சொரசொரப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், தடித்த மற்றும் வழுவழுப்பான சிவப்பு நிற பானை ஓடுகள், தரையில் பதிக்கப்படும் சுடுமண் ஓடுகள், சுடுமண்ணால் ஆன விளக்குகள், குழாய், மூடிகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், துளையுள்ள பானை ஓடு, சிறிது உடைந்த சிவப்புநிற சிறிய குவளை, மான் கொம்பின் உடைந்த பகுதிகள், அரைப்புக் கல் , பெரிய செங்கல், குறியீடுள்ள இரு பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் மற்றும் பண்ணைக்குட்டை பகுதிகளில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு பார்த்தால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு ஊர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது.
இங்கு கிடைத்த ஒரு முழு செங்கலின் நீளம் 29 செ.மீ., அகலம் 15 செ.மீ., உயரம் 7 செ.மீ. ஆகும். இது கி.பி.1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இதே போன்ற செங்கல் கமுதி அருகே பேரையூரிலும் கிடைத்துள்ளது.