ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு எண்ணிற்கு அழைத்து பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகளைக் குறிவைத்து இரு நபர்கள் ஆபாசமாகப் படம்பிடித்து மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட சமூக வலைதளப் பிரவின் உதவியுடன் கீழக்கரை காவல் ஆய்வாளர் யமுனா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், பாதிக்கப்பட்ட பெண் கணவரால் கைவிடப்பட்டவர் எனத் தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கையில், ஏர்வாடி பகுதியில் செயல்பட்டுவரும் 'ஏர்பாத் நெட் கபே' என்ற செல்போன் ரீசார்ஜ் கடையை பாதுஷா, ஹாஜி ஆகிய இருவரும் நடத்திவருகின்றனர். இந்தக் கடையில் சகாபுதீன் என்பவர் பணிசெய்து வருகிறார். அதில் செல்போன் ரீசார்ஜ் மட்டுமின்றி பிறப்பு, இறப்பு, ஓட்டுநர் உள்ளிட்ட அரசுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், கடவுச்சீட்டு விண்ணப்பம் ஆகியவற்றோடு சில சட்டவிரோதமான லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டுவந்துள்ளனர்.
அந்தக் கடையில் பணிபுரியும் சகாபுதீன் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறி தன்னைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும், அவர் கடையின் உரிமையாளரிடம் வாங்கிய 10 லட்சம் ரூபாய் கடனை அடைக்க உதவுமாறு கேட்டார் என்றும் அப்பெண் கூறியுள்ளார். அவ்வாறு பணம் தரவில்லை என்றால் தன்னுடைய ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் சகாபுதீன் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.