ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வன உயிரின சரகத்திற்குள்பட்ட பகுதியான ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள தனுஷ்கோடி கடற்கரையில் கடல் ஆமை முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளது.
ஆமை முட்டைகளைச் சேகரிக்கும் பணியில் வனத் துறை! - ராமேஸ்வரம் தீவுப்பகுதி
ராமநாதபுரம்: ஆமை முட்டையிடும் பருவம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தனுஷ்கோடி பகுதியிலிருந்த 135 ஆமை முட்டைகளை வனத் துறையினர் பாதுகாப்பாக எடுத்து பொரிப்பகத்தில் வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று (ஜன. 11) தனுஷ்கோடி கடற்கரையில் 135 ஆமை முட்டைகள் வனத் துறையினரால் சேகரிக்கப்பட்டு முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் அமைந்துள்ள வனத் துறைக்குச் சொந்தமான கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
கடந்தாண்டு ஜனவரி 18ஆம் தேதி கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த வருடம் ஒரு வாரம் முன்பாகவே கடல் ஆமை முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமும் காலை வேளைகளில் வனத் துறையினர் ஆமை முட்டைகளைச் சேகரித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர்.