ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் இருந்து திருவாடானை செல்லும் சாலையில் அமைந்துள்ள நரிக்குடி கிராமத்திற்கான பிரிவு சாலை அருகே, இருசக்கர வாகனத்தில் வைத்து மூன்று இளைஞர்கள் கஞ்சா விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆயிரத்து 300 கிராம் கஞ்சா பறிமுதல்: மூன்று இளைஞர்கள் அதிரடி கைது
ராமநாதபுரம்: திருவாடானை அருகே ஆயிரத்து 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், இது தொடர்பாக மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அமைக்கப்பட்ட தனிப்படை காவலர்கள் மற்றும் தொண்டி காவல் துறையினர், இளைஞர்கள் இருக்கும் இடம் குறித்த தகவலை அறிந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து மகன் சூர்யா (23), தேவகோட்டை தாலுகா கன்னிகுடி கிராமத்தைச் சேர்ந்த சோனைமுத்து மகன் சந்தோஷ்குமார் (22), தேவகோட்டை தாலுகா சீ.உரணி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி மகன் அருண்குமார் (23) ஆகியோர் தான் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
பின்னர், மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 1,300 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றினர். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.