ராமநாதபுரம்: கீழக்கரை வண்ணந்தரவை ஈபி அலுவலகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, செப்.9ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பயங்கர ஆயுதங்களை காட்டி ஊழியர்களை மிரட்டி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விசாரணையை துரிதப்படுத்த கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷிதம் உத்தரவிட்டிருந்தார். கீழக்கரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் முனியாண்டி உள்ளிட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சின்ன மாயாகுளத்தைச் சேர்ந்த ராஜேஷ் (21), கீழக்கரையைச் சேர்ந்த நிர்மல் ராஜ் (21), பாலமுருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பெட்ரோல் பங்க்கில் ஆயுதம் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர்.