ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கடலில் 1914ஆம் ஆண்டு 2.05 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டு கடந்த 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பாம்பன் ரயில் பாலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது தூக்கு பாலம் வலுவிழந்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து 83நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக பக்தர்களும் பெருமளவில் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 27 அன்று மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் மோடி பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டப்படும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தின் மூலம் கடலில் மண் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
பின்னர் கடந்த மார்ச் 1ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி புதிய பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.