ராமநாதபுரம்: மாவட்ட அளவிலான தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம், பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்பட 120 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
இதையடுத்து அவர் பேசுகையில், "தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது அவரிடம் கல்வி கட்டணத்தைக் கண்டிப்புடன் வசூலிக்கக் கூடாது. மாணவர்களுக்கு கட்டணத்தைச் செலுத்த நெருக்கடி கொடுக்கக் கூடாது. அரசு நெறிமுறைகளின்படி தான் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 2000 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியரும் அந்தந்தப் பள்ளி மாணவர்களின் கைபேசி எண்களை சேகரிக்க வேண்டும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதா?என்பதை சோதனையிட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொல்லைகளுக்கு தலைமை ஆசிரியர்கள் தான் பொறுப்பு.
தலைமை ஆசிரியர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் பள்ளிகளில் நடைபெறுகிறது. ஆகவே மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதலின்படி நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:'நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பு - புள்ளி விவரங்களால் வெளியான அதிர்ச்சித் தகவல்'