ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் பணியாற்றிவந்தவர் இந்திரன். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் பட்டப்படிப்பு படித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (செப். 17) காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது காவல் நிலையம் முன்பாக மதுபோதையில் இருவர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதனைக் கண்ட உதவி ஆய்வாளர் இந்திரன், அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவைத்துக்-கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.
மாரடைப்பால் மரணம்
இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்த சக காவலர்கள் அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உதவி ஆய்வாளர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆய்வாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் மிஸ்ரா உள்ளிட்ட காவல் துறையினர், மறைந்த உதவி ஆய்வாளர் இந்திரனை அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் சுக்குப்பாறை தேரிவினை கிராமத்திற்கு அவசர ஊரதி மூலம் அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர்வரையில் 100 பேருக்கு அண்ணா பதக்கம்