தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு மேலும் 4 பேர் வருகை - இலங்கை பஞ்சம்

இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு மேலும் 4 பேர் வருகை தந்துள்ளனர். அவர்களை மரைன் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு மேலும் 4 பேர் வருகை - மரைன் போலீசார் விசாரணை
இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு மேலும் 4 பேர் வருகை - மரைன் போலீசார் விசாரணை

By

Published : Apr 8, 2022, 10:53 PM IST

ராமநாதபுரம்:இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் நாள்தோறும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக ஏற்கெனவே இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். அதையடுத்து இலங்கை கடற்படையின் அதி தீவிர ரோந்து காரணமாக அகதிகளின் வருகை தடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(ஏப்.8) தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக 4 பேர் வந்துள்ளனர்.

மீண்டும் அகதிகளாய் தமிழ்நாட்டிற்குப் படையெடுக்கும் இலங்கைத் தமிழர்கள்:பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசியத் தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில், இன்று(ஏப்.8) அதிகாலை இரண்டு குழந்தைகளுடன் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தினர் ஆபத்தான முறையில் கடல் வழிப்பயணம் செய்து அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இதே போன்று நேற்று இலங்கை மன்னாரில் இருந்து கள்ளத்தோணி மூலம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு வர முயன்ற 12 பேரை அங்கு இலங்கை கடற்படையினர் பிடித்து தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கைத் தமிழர்கள் இறுதிகட்டபோரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் உள்ளதால், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு குழு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள்: இந்நிலையில், நேற்று(ஏப்.7) இரவு இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பி வந்துள்ளனர். கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை தமிழர்களை அழைத்து வந்தனர். மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ போலீசார் அழைத்து வந்தனர். இலங்கையில் இருந்து ஏற்கெனவே 2 குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்தநிலையில், மேலும் இன்று நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

அவர்களிடம் அலுவலர்கள் நடத்திய விசாரணையில், இலங்கை நாட்டின் பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் இலங்கை மன்னார் மாவட்டம் முத்தரமித்தரை பகுதியிலிருந்து ஒரு பைபர் படகில், கிஷாந்தன்(34) ரஞ்சிதா(29), ஜெனீஸ்டிக்கா(10), ஆகாஸ்(2) உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை மணல்திட்டில் இலங்கையிலிருந்து பைபர் படகில் அதிகாலை 2 மணியளவில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்றனர்.

முகாமில் தங்கவைப்பு:தகவலறிந்த மரைன் காவல்துறையினர், அவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில் இலங்கையில் குழந்தைகள் முதியவர்கள் வாழவே முடியாத ஒரு ஆபத்தான நெருக்கடி நிலை உருவாகி உள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமலும் குழந்தைகளுக்குப் பால் கூட வாங்க முடியாமலும் அவதியுற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ் நாட்டில் குறிப்பாக தனுஷ்கோடிக்கு வருவதற்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முயற்சித்து வருவதாகவும் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வர முடியவில்லை எனவும்; இந்திய அரசு இலங்கை வாழ் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களிடம் தொடர்ந்து பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின் மண்டபம் இலங்கை முகாமில் தங்க வைக்கப்படவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Exclusive: முதலமைச்சர் ஆய்வு செய்ய இருக்கும் பள்ளி - சிறப்பம்சங்கள் என்ன?


ABOUT THE AUTHOR

...view details