ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வேளாண்துறை கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி சக்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர் இல்லாததால் மருத்துவமனையில் இருந்த செவிலியர், சக்திக்கு சிப்ரோஃப்லோசின் மாத்திரையை வழங்கியுள்ளனர்.
இந்த சிப்ரோஃப்லோசின் மாத்திரையை பெற்றுக்கொண்ட சக்தி, வீட்டிற்கு சென்றதும் தொண்டைப் புண் காரணத்தால் மாத்திரையை முழுவதுமாக சாப்பிட முடியாமல் இரண்டாக உடைத்துள்ளார். அதில் கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த நபர்களிடம் இதுகுறித்து கூறியதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாத்திரையை உடைக்காமல் சக்தி சாப்பிட்டிருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், சுகாதாரத்துறை இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.