ராமேஸ்வரம்: மண்டபம் பகுதியையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாதையாக உள்ள பாம்பன் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஏறத்தாழ 105 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம், 1988 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தையும், மண்டபத்தையும் இணைக்கும் சாலை பாலம் அமைக்கப்படும் வரை தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்தாக இருந்தது.
ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டதால், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களை விரைவாக இயக்கவும், புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் நவீன முறையில் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. இதையடுத்து பாம்பன் கடலில் ஏறத்தாழ 2 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 535 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்வே பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ரயில்வே பால கட்டுமான பணிகளை இந்திய ரயில்வேயின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 84 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், புதிய பாலத்திற்காக கடலில் பல்வேறு சீதோசன சிரமங்களுக்கு இடையே 101 தூண்களை நிறுவியதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தூண்களில் 99 இணைப்பு கிர்டர் வசதி அமைக்க வேண்டிய நிலையில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.