ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப் பகுதியிலிருந்து இலங்கை கடல் எல்லையை எளிதில் சென்றடைய முடியும் என்பதால் போதை பொருள், தங்கம், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு பல கிலோ மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டதாக ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமேஸ்வரம் துணைக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு வாகன சோதனையில் ஈடுபடும்படி உத்தவிடப்பட்டது.
உத்தரவின்பேரில் மண்டபம் சார்பு ஆய்வாளர் சிராஜூதீன் பூவன் குடியிருப்புப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை மறித்து சோதனையிட்டதில், அதில் பயணித்தவர்கள் பெயர், முகவரியை முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 53 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.4,73,000 காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.