ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிற்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. புகாரின் அடிப்படையில் பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமசுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தின் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கருமலையான் என்பவரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
தனிப்படையினர் கைது செய்த திருடர்கள் மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது கூட்டாளிகளான கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த ஐயப்பன், கண்ணன் என்ற வெள்ளி கண்ணன், தேனி சின்னமனூரைச் சேர்ந்த ஹக்கிம் ராஜா, பரமக்குடியைச் சேர்ந்த குமார் ஆகியோரை கைது செய்து 30 பவுன் நகைகளை கைப்பற்றினர்.
பின்னர் இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று பரமக்குடியில் நடந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் தனிப்படையினர் விசாரணை செய்து வந்தனர். அந்த விசாரணையில் சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பரமக்குடி சுந்தரராஜபட்டணத்தைச் சேர்ந்த பானுப்பிரியா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.