நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணம் இன்றி வாகனங்களில் எடுத்து வரப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுவரை 15 வழக்குகளில் ரூ.15 லட்சம் இந்திய பணமும், ரூ. 28 லட்சம் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதேபோல் திருவாடானை பகுதியில் நடைபெற்ற சோதனையில் 160 கை கடிகாரம், 14 லேப்டாப் கைப்பற்றப்பட்டன. இந்த பணம், கடிகாரம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை செய்தியாளர்களுக்கு காட்சிப்படுத்தினார்.
பின்பு ஆட்சியர் கூறுகையில்,
இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் இருந்த அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள் 17 ஆயிரத்து 945 நீக்கப்பட்டுள்ளன.அதேபோன்று மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் மற்றும் நிலைத்தல் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த குழுக்கள் மூலம் இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 850 மதிப்பில் இந்திய பணமும், 28 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள சிங்கப்பூர் டாலர் மற்றும் மலேசியா ரிங் கட் என மொத்தம் 43.26 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த பணம் கருவூலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களுடன் ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க படும் பட்சத்தில் அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்படும். இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் வங்கிகளில் 10 லட்சம் மேல் நடைபெறும் பணப் பரிவர்த்தனை கண்காணிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.