ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு அதிகளவில் கஞ்சா, மஞ்சள் உள்ளிட்டவை கடத்தி செல்லப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் மதுரையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 260 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து, அது தொடர்பாக 13 பேரை கைது செய்தனர்.
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இவர்களிடம் நடத்திய விசாரணையில் காவல் துறையினருக்குப் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் ராமநாதபுர மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை கண்டறிந்து தடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் பகுதியில் காவல் ஆய்வாளர் சரவணபாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் ஜனகன் உள்ளிட்ட காவல் துறையினர் குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது காரின் பின்பகுதியில் இருக்கைகளை அகற்றிவிட்டு, அதில் 5 மூட்டைகளில் தலா 30 கிலோவும், ஒரு சிறிய மூடையில் 10 கிலோவும் என மொத்தம் 160 கிலோ கஞ்சாவை வைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது.