நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது, பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கிடையே, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான தளர்வுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.
இதனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ கூடாது என தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உயர்நீதிமன்றமும் அரசு உத்தரவை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தடையை மீறி ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.