மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பாக கடலில் விடப்பட்ட இறால் குஞ்சுகள்
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா பகுதியில் இறால் எண்ணிக்கையை அதிகரிக்க கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பாக 10 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் அமைந்து உள்ளது. இதன்மூலம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இறால் மீன்கள் அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை இறால் குஞ்சுகள் கடலில் விடப்படும்.
அந்தப் பகுதியில் உள்ள தாளை, பூ இரால் போன்ற புட்களைச் சாப்பிட்டு இறால் மீன்கள் நன்கு வளரும். அந்த வகையில் 2017-19 வரையிலான காலகட்டத்தில் 87.45 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இவை கடலில் இறால் மீன்கள் வளம் குறையாமல் பார்த்துக் கொள்வதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்துவருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) 2020-21ஆம் ஆண்டிற்கான இறால் குஞ்சுகள் சுமார் 10 லட்சம் பாக் ஜலசந்தி கடல் பகுதியான முனைகாடு பகுதியில் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விடப்பட்டது.
இந்த நிகழ்வில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய நிர்வாக குழு உறுப்பினரான முரளிதரன், என் எம்.டி.சி. இயக்குநர் குப்புராமு, கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி ஜெயக்குமார், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஜான்சன், சங்கர், அலுவலர்கள், மீனவ தலைவர்கள், மீனவர்கள் பங்கேற்றனர்.