ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள மல்லல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன், இவரது மகன் சுகனேஷ்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (மே.6) மாலை சக நண்பர்களுடன் வீட்டின் அருகாமையில் உள்ள கண்மாய்க்கரையில் குளித்துவிட்டு அதன் அருகில் இருக்கக்கூடிய கிணற்றுப் பகுதியில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டுப் பெய்து வரும் மழையால் கிணற்றின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடை சுவர்கள் பலவீனமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தெரியாமல் சிறுவர்கள் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்ததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் சுகனேஷ் 15 அடி பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.
இதனை அறிந்த சக நண்பர்கள் அந்த சிறுவனின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள். அதன் பின் ராமநாதபுரம் மற்றும் உத்திரகோசமங்கை தீயணைப்புத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி மீட்கும் பணியில் கடந்த 5 மணி நேரமாக ஈடுபட்டுவந்தனர்.