கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொங்கல் பண்டிகைக்கு பின்னர் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித் துறை முடிவுசெய்துள்ளது. இதனால், 10, 12ஆம் வகுப்பு பாடம் நடத்த பள்ளிகள் திறப்பது குறித்து ஜனவரி 08ஆம் தேதிக்குள் பெற்றோர் கருத்துகளை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும், பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று கருத்துக் கேட்பு நடக்கிறது. அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள 269 பள்ளிகளின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 17 ஆயிரத்து 719 பேரின் பெற்றோர்களிடமும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 15 ஆயிரத்து 51 பேர்களின் பெற்றோர்களிடமும் கருத்துக் கேட்பு நடைபெற்றுவருகிறது.
இன்று இதற்கான அறிக்கை அனுப்ப வேண்டும் என்பதால் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி தலைமையாசிரியர், முதல்வர்கள் மூலம் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்து கருத்துக் கேட்பு நடக்கிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்களுக்கு தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு முகக்கவசம் அணிந்த பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.