கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வேலையில்லா திண்டாட்டம் உருவாக வழிவகை செய்துள்ளது. சொந்த தொழிலில், காலூன்றியிருப்பவர்களுக்கும் இதனால் அச்சம் பீறிடுகிறது. பொருளாதார நெருக்கடியின் பாரம் தாளாமல், சென்னை தரமணியை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் பரணி தன் கடையிலையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெளிவந்த செய்தி பட்டியலில் பரணியிருக்கலாம், ஆனால் சிகை திருத்துவதையே பிரதான தொழிலாகக் கொண்ட எத்தனையோ பரணிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சலூன் கடைகளில், ஒரு கடைக்கு இருவர் வீதம் கணக்கிட்டால் 4 ஆயிரம் பேர் சிகை திருத்தும் தொழிலை ஆதாராமாகக் கொண்டு வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கில் ஏற்படுத்திய தளர்வுகளில் அத்தொழில் இடம்பெறாதது, அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சலூன் கடைகளில் கரோனா பரவ வாய்ப்பிருப்பதாக அரசு தளர்வு அறிவிக்காமலிருக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கை தங்களுக்கு பேரிடியாகத்தான் விழுந்திருக்கிறது என்கின்றனர், அத்தொழிலாளிகள்.
சிகை திருத்தும் தொழிலாளி இளங்கோவின் மனைவி தமிழ்செல்வி, ”அரசு சொன்ன அனைத்திற்கும் பணிந்து, நாங்கள் கடைகளை அடைத்துவிட்டு வீட்டிலேயே இருந்தோம். தற்போது, அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு அறிவித்துள்ளது. ஆனால் சலூன் கடைகள் மட்டும் திறக்கக்கூடாது என்று தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், நாங்கள் வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவற்றை எப்படி கொடுப்பது, அன்றாடம் வாழ்க்கையை எதை வைத்து நடத்துவது? கடையை திறக்கவிடாத இந்நிலை தொடரும் பட்சத்தில், உயிரை விடுவது தவிர வேறு வழி தெரியவில்லை” என்றார்.
வெறிச்சோடி கிடக்கும் சலூன் கடை இதுகுறித்து ராமநாதபுரம் நகர சலூன் கடைகளின் சங்கத் தலைவர் உமாநாத், “மாநில அரசு அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சலூன் கடையை நம்பியுள்ள எங்களுக்கு இதுவரை எவ்வகையான அறிவிப்பும் வெளியிடவில்லை. ராமநாதபுரத்தை பொருத்தவரை வெறும் 60 நபர்கள் மட்டுமே சங்கத்தில் பதிந்து, பயன்பெற்றுள்ளனர். மற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் இதுவரை கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக, சலூன் கடைகளை நேரக்கட்டுப்பாட்டுடன் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், சலூன் கடையை நம்பி உள்ள அனைவரின் வாழ்வாதாரமும் மிகவும் மோசமடைந்துவிடும்” என வேதனையுடன் சொல்லி முடித்தார்.
நேர கட்டுப்பாடு விதித்தாவது கடையை திறக்கவிடுங்கள்: சிகை திருத்தும் தொழிலாளிகள் சத்தான உணவுதான் நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கி கரோனாவிலிருந்து தப்பிக்க வழிவகை செய்யும். ஆனால், அன்றாட கூலியை நம்பி வாழ்ந்துவரும் சிகை திருத்துபவர்களுக்கு அதற்கும் வழியில்லாமல் போனது. சலூன் கடைகளின் சங்கத்தில் பதிந்து கொள்ளக்கூட தெரியாத அறியாமையில் கிடக்கும், சிகை திருத்தும் தொழிலாளர்களுக்கு, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரடங்கில் கடையை திறக்க விதிமுறைகளுடன் கூடிய அனுமதியும், உதவித்தொகையும் அளிக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எளிமையான கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க: 'விலைவாசி ஏறுது எங்க கூலி உயரல' - நெருக்கடியில் உழலும் நெசவாளர்கள்!