தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சென்னை to இலங்கை' போட் மெயில் ரயில் பயணம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில்பாதையை மீட்டெடுக்கக் கோரிக்கை.. - இந்தியா இலங்கை ரயில் போக்குவரத்து

Restart boat mail express train service: சென்னை முதல் கொழும்பு வரை பயணித்த நீண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதையைச் சரிசெய்து மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே ரயில் சேவையைத் தொடங்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு..

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:40 PM IST

சென்னை:இன்றைக்கு நினைத்தாலும் வியப்புதான் மேலிடும். சென்னை எழும்பூரில் ரயில் டிக்கெட் எடுத்தால், கடல் கடந்து கொழும்பு வரை பயணிக்கலாம். அது ஒரு வித்தியாசமான பயணம். தனுஷ்கோடி வரை ரயிலில், பின்னர் கப்பலில் தலைமன்னார் வரை. அதன் பிறகு, ரயிலில் கொழும்பு வரை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1914-ல் தொடங்கிய இது, போட் ரயில் மெயில் (Boat Mail Express) அல்லது இந்தோ-இலங்கை ரயில் சேவை எனப்படும்.

தனுஷ்கோடி வழியாக இலங்கையின் கொழும்பு சென்ற ரயிலின் ரஅரிய புகைப்படம்

மர்மங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்று போட் மெயில். அந்தக்காலத்தில் சென்னையை உலுக்கிய ஆளவந்தார் கொலை. தலையற்ற அவரது உடல் அந்த ரயிலில்தான் சென்றது. அப்போது, சென்னை திரைப்பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளியிட்டு வந்த லட்சுமி காந்தன் வழக்கிலும் இந்த ரயிலுக்குத் தொடர்புண்டு. கண்டியின் தேயிலைத் தோட்டத்துக்குத் தமிழர்கள் சென்றதும், இதில் தான்.

இலங்கை to சென்னை ரயில் போக்குவரத்து இருந்ததை உறுதிப்படுத்தும் டிக்கெட்

ரூ.733 கோடி மதிப்பில் தனுஷ்கோடிக்கு புது ரயில் பாதை:அன்று கலகலப்பும் பரபரப்பும் நிறைந்த தனுஷ்கோடி, இன்று களையிழந்து பழைய சுவடுகளின் எச்சத்தைத் ஏந்திக்கொண்டிருக்கிறது. 1964 டிசம்பர் 22ஆம் தேதி தாக்கிய கோரப் புயலில் தனுஷ்கோடி ரயில் பாதை முழுவதுமாக அழிந்தது. ரயில்வே துறை மீண்டும் தனுஷ்கோடிக்கு இருப்புப்பாதை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்த புயல் தாக்கி 55 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை, 18 கி.மீ., தூரத்திற்கு புது ரயில் பாதை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்து மொத்தம் ரூ.733 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

தனுஷ்கோடி வழியாக இலங்கையின் கொழும்பு சென்ற ரயிலின் ரஅரிய புகைப்படம்

பிரதமர் மோடி அடிக்கல்:ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை சுமார் 18 கி.மீ. தொலைவுக்கான இப்புதிய ரயில் பாதை திட்டத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2019 மார்ச் 1-ஆம் தேதி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். ஐந்து ஆண்டுகள் ஆயினும் இன்னும் இந்த ரயில் திட்டம் பகல் கனவாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தைக் கொண்டு வருவது என்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது.

தனுஷ்கோடியில் கடற்கோளால் அழிந்த ரயில்பாதை

நாடாளுமன்றத்தில் அகிலேஷ் பிரசாத் சிங் எம்பி எழுப்பிய குரல்: ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மாநிலங்களவை எம்.பி அகிலேஷ் பிரசாத் சிங், "ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைப்பதற்கு ஆண்டு வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்" குறித்து எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைப்பதற்கு 2018-1ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்குத் திட்டத்தொகையாக, ரூ.208.30 கோடி செலவாகும் என மத்திய அரசு கணக்கிட்டது.

தனுஷ்கோடியில் கடற்கோளால் அழிந்த ரயில்பாதை

ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி ரயில் பாதை;கைவிடக் கோரிய தமிழக அரசு:மேலும் புதியதாக இந்த திட்டத்திற்கு ரூ.733.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசு 2023 ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அன்று மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், "சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி இருந்து வருகிறது. இதனால், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான ரயில் பாதை திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறியிருந்தது" என எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

3 ரயில் நிலையங்கள், 1 டெர்மினல் ரயில் நிலையம்:இது குறித்துப் பெயர் சொல்ல விரும்பாத ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த, இந்திய ரயில்வே துறை தயாராக இருக்கிறது. பல்வேறு முதற்கட்ட பணிகள் ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை உள்ள இடங்களில் 2022ஆம் ஆண்டு நடைபெற்றன. இதில், கடற்கரைக்கு அருகில் ரயில் பாதை அமைய உள்ளதால் அந்த தூண்கள் அதிக உறுதியோடு இருக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு கட்ட மண் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தனுஷ்கோடியில் கடற்கோளால் அழிந்த ரயில் நிலையம்

மேலும், இந்த 18.கி.மீ ரயில் பாதையை வெள்ளம் மற்றும் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க 5 முதல் 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பொறியாளர்கள் பரிந்துரைத்தனர். அதனால், குறிப்பிட்ட பாதையில் மட்டும், 13 கி.மீ. வரை உயர்மட்டப்பாதை அமைகின்றது. 3 ரயில் நிலையங்களும், 1 டெர்மினல் ரயில் நிலையமும் அமைகின்றன.

185 ஏக்கர் நிலம் தேவைப்படலாம்: ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட அன்றைய ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் வழித்தடத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்ததில், இந்த பகுதியில் தற்போது குடியிருப்புகள், தனியார் வணிக கட்டடங்கள் அதிகம் உள்ளன. இந்த காரணத்தினால், இந்த வழித்தடத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் கைவிட்டனர். ஆனால், மாற்றுப்பாதையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, 105 ஏக்கருக்கு மேல் இருக்கும் மாநில அரசுக்குச் சொந்தமான இடமும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 70 ஏக்கர் இடமும், 10 ஏக்கர் அளவில் தனியாருக்குச் சொந்தமான இடமும் தேவைப்படுகிறது.

ரயில் சேவையை மீண்டும் தொடங்க தயாரான மத்திய அரசு;தமிழக அரசு முட்டுக்கட்டையா?:பொதுவாக மத்திய அரசு, ஒரு திட்டம் ஒரு மாநிலத்தில் செயல்படுத்தப்படும் போது, அதற்கு நிலம் தேவைப்பட்டால், மாநில அரசு வாயிலாகத் தான் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், 'சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதிகள் உள்ளதால், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான ரயில் திட்டத்தைக் கைவிட வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளது.

பூர்வாங்கப் பணிகள் நிறைவுற்றாலும், 2019 ஆம் ஆண்டிலிருந்தே மாநில அரசு ஆர்வம் காட்டாததே திட்டம் தாமதமாவதற்குக் காரணமாக இருந்து வருகிறது. அப்போதைய மாநில அரசு, ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இன்றைக்கு புதிய பாம்பன் பாலமும் - இந்த பாதையும் ஒன்றாக இருந்திருக்கும்" என தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய தெற்கு ரயில்வே அதிகாரிகள், "ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை, ஒற்றை வழித்தடத்தில் மின் மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையாக இருக்கும். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ஜடாயு தீர்த்தம், கோதண்டராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து அக்காள் மடம் வழியாக தனுஷ் கோடிக்கு புதிய ரயில் பாதை அமையும். இப்போதுகூட, நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், நிலம் கையகப்படுத்திவிட்டால் உடனுக்குடன் பணியானது தொடரும் என தெரிவித்தனர்".

சுற்றுச்சுழல் பெருமளவு பாதிப்பாக்காது?:இதைத்தொடர்ந்து இந்த ரயில் பாதை திட்டம் குறித்து அங்கு இருக்கும் நாட்டுப் படகு மீனவர் நல உரிமை சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பி.ராயப்பன்கூறுகையில், "ராமேஸ்வரம் - தனுஷ் கோடி ரயில் பாதை அமைப்பதால், மீனவர்களுக்கு அங்குப் பாதிப்பு என்பது கிடையாது. ஆனால், அங்கிருக்கும் குடியிருப்புகள் மற்றும் சில நிலங்கள் பாதிப்புக்கும் உள்ளாகும். அங்குச் சுற்றுச்சுழல் பெருமளவு பாதிப்படையாது.

ராமேஸ்வரம் பகுதியில் அதிகமாக இருப்பது மீனவ சமுதாய மக்கள்தான். இதுவரை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு என்பது வரவில்லை. மேலும், இந்த ரயில் பாதை புதியதாக அமைப்பதில்லை. 1964ஆம் ஆண்டுவரை இந்த ரயில் பாதை இருந்தது. அந்த ஆண்டு புயலின்போது, சேதமடைந்தது. அதன்பிறகு தற்போது, இந்த ரயில் பாதையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வருமா? முடிவுக்கு வந்த ரயில் பாதை: தெற்காசியா முழுவதும் ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு, இலங்கையையும் சென்னையிலிருந்த ஆங்கிலேய ஆளுநர்கள் கீழ் வைத்திருந்தது. இந்தியாவை இலங்கையுடன் இணைத்த ரயில் நிலையமும் தனுஷ்கோடியின் சிறப்புகளில் ஒன்றாக இருந்தது. மேலும் வணிக ரீதியிலும், மக்கள் போக்குவரத்திலும், தனுஷ்கோடி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இவ்வாறு 100 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடியே பிரசித்தி பெற்றிருந்தது.

தலைமன்னாரை மேம்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு: தனுஷ்கோடியின் நிலை?: 1914-ல் இருந்து செயல்பட்ட போட் மெயில் ரயில், சுதந்திரத்திற்கு பிறகும் 1964 வரை நீடித்தது. அந்த 1964 டிசம்பர் 22ஆம் தேதி ஏற்பட்ட கோரப்புயலில், சென்னையிலிருந்து தனுஷ்கோடி வந்த பயணிகளுடன் ரயில் கடலுக்குள் மூழ்கியது. பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர். தனுஷ்கோடியையே கடல் கொண்டது. தலைமன்னாருடனான கடல்வழித் தொடர்பும் நின்றுவிட்டது. இதனை நினைவுபடுத்த மன்னாரில் இப்போதும் கலங்கரைவிளக்கம் இருக்கிறது. அதை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது, இலங்கை அரசு.

கடற்கோளால் மண்ணுக்குள் போன ரயில் பாதை.. மீள்வது எப்போது?:தற்போது, ரயில் சேவை சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும், இலங்கையில் உள்நாட்டு போா் தீவிரமடைந்த பிறகு, தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடகிழக்கு பகுதிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து முழுவதும் நின்றுவிட்டது.

1964 புயலுக்குப் பின், மண்ணுக்குள் புதைந்த அந்த ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ரயில் பாதை வரலாற்றைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இருப்புப்பாதை மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" என பாரதியாரின் வரிகள் நிதர்சனமாக அமைய வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிங்க:சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370; சிறப்பு அந்தஸ்தின் தோற்றம் முதல் நீக்கம் வரையிலான முழு வரலாறு!

ABOUT THE AUTHOR

...view details