ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மேலக்கொடுமலூரில் உள்ள சிவன் கோயில், விஜயநகர அரசின் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டடக்கலை உள்ளிட்ட சிறப்புகளை கொண்டுள்ளது. ஆனால் இது தனது கடந்த காலச் சிறப்பை இழந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது இக்கோயிலை பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, மேலக்கொடுமலூர் குமுலீஸ்வரர் கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட சிறிய கோயில் ஆகும். எனினும் அழகிய தேவகோட்டம், விருத்தஸ்புடிதம் போன்ற அமைப்புகளுடன் கருவறை, அர்த்தமண்டபத்துடன் உள்ளது.
நுழைவுவாயிலில் கஜலட்சுமி உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் சதுரவடிவ ஆவுடையுடன் லிங்கம் உள்ளது. இங்கிருந்த இரு கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1907-இல் பதிவு செய்துள்ளது.
கி.பி.11-ஆம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டுகளில் உத்தமசோழநல்லூர் எனப்படும் இவ்வூர், கி.பி.13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் உத்தமபாண்டியநல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. கல்வெட்டில் இறைவன் உத்தமபாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார்.
இவ்வூரைச் சேர்ந்த அரையன் யாதவராயன், உச்சிபூசைக்காக நிறுவிய கண்டவிரமிண்டன் என்ற சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக, மன்னர் சுந்தரபாண்டியன் வடதலைச் செம்பிநாட்டு கொற்றூர், கண்ணிப்பேரி, உழையூர் ஆகிய ஊர்களை தானமாகக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் விளைந்த நிலத்துக்கு வரி விதிக்கப்பட்டு கோயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.