ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் மாதம் 14ஆம் தேதிவரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். இந்தாண்டு கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்ட ஊரடங்கு மார்ச் மாதம் 24ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து விசைப்படகு மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதனால், மீன்பிடித் தடைக்காலத்தை முன்னதாகவே எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கைவைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மத்திய அரசு மீன்பிடித் தடைக்காலம் மே 31ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றும், ஜூன் 1ஆம் தேதிமுதல் மீன் பிடிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் அனைத்து மீனவர் சங்கம் செயற்குழு உறுப்பினர் மகத்துவம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
- ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடந்த சில வாரங்களில் வீசிய சூறைக்காற்றினால் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் சேதமடைந்தன. அதனைச் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
- ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் பாதிப்படைந்துள்ள மீனவர் குடும்பத்துக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தலா இரண்டு மாதத்திற்கு வழங்க வேண்டும்.
- கரோனா ஊரடங்கு பாதிப்பினால் படகுகளைக் கரையேற்றிச் சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டதால், படகுகளைத் தற்போதுவரை சீர்செய்யப்படாத நிலை உள்ளது. அதுபோல மத்திய, மாநில அரசுகள் அறிவித்ததுபோல் ஜூன் 1ஆம் தேதிமுதல் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியாத சூழலில் இருந்துவருகிறது. அதனால் மீன்பிடிப் படகுகளைத் தயார்செய்து ஜூன் 15ஆம் தேதிமுதல் மீன்பிடிக்கச் செல்ல கால அவகாசம் வழங்க கோரிக்கைவிடுக்கப்படும்.
இதையும் படிங்க:மினிகாய் தீவு அருகே கடலில் தத்தளித்தவர்கள் மீட்பு