ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்புமின்றி தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சன்னதியின் அருகே உள்ள தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டரை இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
ராமநாதசுவாமி கோயிலில் தரிசன கட்டணம் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் 50 ரூபாயாக இருந்த சிறப்பு தரிசனச் சீட்டு 100 ரூபாயாகவும், விரைவு தரிசனச் சீட்டு 200 ரூபாயாகவும், அம்பாள் தரிசனச் சீட்டு 50 ரூபாயாகவும், 1500 ரூபாயில் செய்து வந்த ரூந்தரபிஷேகம் 3000 ரூபாயாகவும், 1000 ரூபாயில் செய்து வந்த பஞ்சாமிர்த அபிஷேகம், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் 3000 ரூபாயாகவும் வெள்ளி ரத புறப்பாடு, பஞ்சமூர்த்தி புறப்பாடு தரிசனம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும் கோயில் நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டு ஆங்காங்கு சிறு காகிதங்களில் விலை பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இந்து மக்கள் கட்சியினரிடமும், கோயில் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, 'கட்டணத்தை உயர்த்தக்கோரி ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதால் உயர்த்தப்பட்டுள்ளது' என்று கோயில் நிர்வாகிகளும் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக, இந்து மக்கள் கட்சியினரும் காவல்துறையினரிடம் வாக்குவாதம் நடத்தினர்.