மதுரை: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் நெரிசலை தவிர்க்க தற்போது உள்ள ரயில் நிலைய கட்டடம் 120 கோடி ரூபாய் செலவில் புதியதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. புதிய ரயில் நிலையக் கட்டடம் இரண்டு மாடிகள் கொண்டதாக அமைய உள்ளன. பிற்காலத்தில் ஆறு மாடிகள் கட்டும் அளவிற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது.
இரண்டாவது மாடிக்கு மேலே திறந்தவெளி உணவகங்கள் அமைய இருக்கின்றன. பயணிகள் ரயில் நிலையத்திற்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான தூண்கள் ராமேஸ்வரம் கோயிலின் பிரபலமான தூண்கள் போல அமைய உள்ளன. ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியிலும் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் வர இருக்கிறது. நடைமேடைகள் எண் 3, 4 மற்றும் 5 ஆகியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது.