தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேய்மானம் காரணமாக நகைகள் எடை குறைவு: ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் அறிக்கை - ராமேஸ்வரம் கோயில் நகை எடைகுறைவு

ராமநாதபுரம்: தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாக ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Temple
Temple

By

Published : Nov 5, 2020, 12:33 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மாளுக்கு அலங்கார ஆபரணம், சப்பரங்கள் என 65 வகையான நகைகள் உள்ளன. 40 ஆண்டுக்கு பின் தற்போது நீதிமன்றம் அறிவித்தலின்படி மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

அதில் நகைகளின் எடை குறைந்து இருப்பதாகவும் இது தொடபாக முன்னாள், தற்போது பணிபுரியும் குருக்களுக்கு அபராதத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பாக அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

அதில் "இத்திருக்கோயிலின் 1978இல் நகைகள், விலை உயர்ந்த பொருள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன . பின்னர் தற்பொழுது சிவகங்கை துணை ஆணையர் நகை சரிபார்ப்பு அலுவலரால் 29.01.2019 முதல் 07.03.2019 முடிய இத்திருக்கோயிலின் நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு பார்வைக்குறிப்பு உள்படி மறு மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டது .

நாற்பதாண்டுகள் கழித்து நடைபெற்ற மதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த நகைகள், தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளது. அதில் 18 தங்கப் பொருட்களில் சுமார் 68 கிராம் எடை குறைந்துள்ளது.

அதன் மதிப்பு தொகை ரூ. 2 லட்சத்து 11 ஆயிரத்து 790 ரூபாய். சிறிய 14 தங்கப் பொருட்களில் மதிப்பு ரூ. 2,454. ஆக மொத்தம் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 244.

வெள்ளியில் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 344 இனங்களில் 25,811 கிராம் தேய்மானத்தின் அடிப்படையிலான எடை குறைவுக்கான தொகை ரூ 10 லட்சத்து 93 ஆயிரத்து 340 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி இனங்களில் தங்க முலாம் பூசப்பட்டவற்றில் 43 கிராம் 700 மில்லிகிராம் எடை குறைவிற்கான மதிப்பு ரூ. 1,35,670 ஆக கூடுதல் வெள்ளியில் மொத்தம் 12 லட்சத்து 29 ஆயிரத்து 10 ரூபாய் இழப்பு எனவும் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த பொருட்களை பொறுப்பில் வைத்திருந்த பணியாளர்களிடமிருந்து வசூல் செய்யலாம்.

தங்கம், வெள்ளி என அனைத்தும் எண்ணிக்கையில் சரியாக உள்ளது. கடந்த மறுமதிப்பீட்டிற்கும் தற்போதைய மறு மதிப்பீட்டிற்கும் இடையே 40 ஆண்டுகள் இடைவெளி உள்ள நிலையில், இந்த 40 ஆண்டு காலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர் , விருப்ப ஓய்வு 2 நபர்கள் , தற்போது பணியில் உள்ளவர்கள் 32 பேர் என மொத்தம் 47 பேரிடம் நாற்பதாண்டு கால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு அதற்கான எடை குறைவுக்கான இழப்பினை ஏன் தங்களிடமிருந்து வசூல் செய்யக்கூடாது என விளக்கம் கோரி தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை . முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை. இதற்காக பொது மக்களோ பக்தர்களோ திருக்கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details