ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட சுற்றுலா கார், வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது அரசு அலுவலர்கள் பயன்படுத்திய கார்களுக்கு வாடகை பணம் ரூ. 12 லட்சம் பாக்கியை தரக்கோரி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.ஏ. ஜஸ்டின், மாவட்டத் தலைவர் ஜி. மாரிமுத்து ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கடந்த மக்களவைத் தேர்தலில் மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு வாடகை வாகனங்கள், சங்கம் மூலம் இயக்கப்பட்டன. 135 வாகனங்கள் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், 125 வாகனங்கள் காவல் துறையினருக்கும் வாடகைக்கு இயக்கப்பட்டன.
தேர்தல் முடிந்ததும் காவல் துறையினருக்கான வாகனங்களுக்கு வாடகைப் பணம் உரிய நேரத்தில் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் வழங்கிய வாகனங்களுக்கான வாடகைப் பணம் முழுமையாகத் தரப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்திற்கு இயக்கப்பட்ட வாகனங்களுக்கு மொத்தம் ரூ.20.91 லட்சம் வாடகை தரவேண்டிய நிலையில், ரூ. 8 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளது.
இந்த பாக்கித் தொகையை பலமுறை கேட்டும் தொடர்புடைய அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். கருவூலத்துக்கு உரிய பணம் வந்துள்ளபோதிலும், அலுவலர்கள் அதை வழங்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. இதனால் சொந்த வாகனம் வைத்திருப்போர் அதை வாடகைக்கு விட்டு கட்டணம் வசூலிக்கும் நிலையே உள்ளது’ என்று தெரிவித்தார். பின்னர் ஓட்டுநர்களை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் கே. செல்வகுமார் அழைத்து பேசி, வாடகை பணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேலூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பூங்கா!