ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி நாகலெட்சுமி 2019 ஆம் ஆண்டு தங்கச்சிமடம் அருகேயுள்ள சந்தியாகப்பர் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஏழு சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இவ்வழக்கினை ராமேஸ்வரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்ததில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார், ரவுனி வலசையைச் சேர்ந்த பிரகாஷ் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் சரவணக்குமாரைப் பிடித்து விசாரித்தபோது, சரவணக்குமாரும், பிரகாசும் இருசக்கர வாகனத்தில் வந்து நாகலெட்சுமியிடம் ஏழு சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.