ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே மேலகுடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தில் பிரச்னை காரணமாக, அக்குடும்பத்தில் பத்து நபர்கள் மீது பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது.
இதில் தங்கவேல் என்பவரின் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டிருந்தது. தங்கவேல் மனைவியின் பெயரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்குமாறு பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் ராஜராஜன் கேட்டுள்ளார்.
தங்கவேல் ஒரு வாரத்திற்கு முன்பு ரூ. 15 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். மீதியுள்ள ரூபாய் ஐந்தாயிரத்தை தருமாறு அடிக்கடி தங்கவேலை ஆய்வாளர் தொந்தரவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தங்கவேல், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தொலைப்பேசியில் புகார் தெரிவித்ததோடு, இன்று காலை மனுவும் அளித்துள்ளார்.
அவரின் ஆலோசனையின்படி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக்கொண்ட தங்கவேல். இன்று மதியம் அந்த ஐந்தாயிரம் பணத்தை லஞ்சமாக காவல் ஆய்வாளர் ராஜராஜனைச் சந்தித்து கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு காவலர்கள் ராஜராஜனை கையும் களவுமாக கைது செய்தனர்.
பின் இவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் தேங்காய் உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பார்த்திபனூர் காவல் நிலையம் இதையும் படியுங்க: குழந்தைகள் ஆபாச வீடியோ கைது லிஸ்டில் வடமாநில இளைஞர்!