ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள கடுகு சந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் குருபாலன், கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றுவந்தார்.
நேற்று மாலை நண்பர்கள் இருவருடன் குளத்தில் குளிக்கச்சென்று நீச்சல் பயின்றுவந்த நிலையில், நீந்தி மறுகரைக்குச் செல்லும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குளத்தின் நடுவே தத்தளித்துக் கொண்டிருந்தார். உடனே நண்பர்கள் இருவரும் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் குருபாலன் நீரில் மூழ்கிவிட்டார்.
உடனடியாக சாயல்குடி தீயணைப்பு, மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புக் குழுவினர் குளத்தில் மூழ்கிய குருபாலனை மீட்கப் போராடினர். இதனிடையே 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் இருந்தது. ஒருவழியாக நீண்ட தேடுதலுக்குப் பின் குருபாலன் சடலமாக மீட்கப்பட்டார்.