ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் ஆட்சிக் காலமான 1605ஆம் ஆண்டிலிருந்து, ராமநாதபுரத்தில் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்களும் வெகுவிமரிசையாக, சேதுபதி மன்னர்களின் அரண்மனை வளாகத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். நவராத்திரியின் இறுதிநாளான விஜயதசமி அன்று சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் மற்ற தெய்வங்கள் புடைசூழ மகர்நோன்பு பொட்டலுக்கு ஊர்வலமாகச் சென்று, அங்கு மகிஷாசுரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மட்டும் இன்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த 400 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, அரசு கோயில் விழாக்களை எளிமையாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பொது மக்கள் பங்கேற்பு இன்றி அரண்மனை வளாகத்திலேயே மகர்நோன்பு எனப்படும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.