ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கிவைத்தார்.
பின்னர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அவர் பேசுகையில், "தேசிய ஊட்டச்சத்து மாத விழா கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து உணவு அளிப்பது குறித்து இந்த விழா நடைபெற்று வருகிறது. பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகள் முறையாக ஊட்டச்சத்து உணவை உண்டு உடலை பராமரிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 368 ஆக உள்ளது. இவர்களில் 5.5 விழுக்காடு பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 விழுக்காடு பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டறிந்து வீடுகளுக்குச் சென்று ஊட்டச்சத்து உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய ஊட்டச்சத்து மாத விழா மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரத்தில் சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகள் 21 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாத்திரைகள் வீடுகளுக்கு சென்று நேரில் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க:அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் - அமைச்சர் முத்துசாமி