ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள காரங்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன, மேலும் இப்பகுதியானது கடல்பசு, கடல்குதிரை, கடல்பாசி உள்ளிட்ட கடல்சார் வன உயிரினங்கள் நிறைந்த பகுதியாகவும் விளங்குகின்றது.
இப்பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்த்திடும் நோக்கில் வனத்துறை ஒருங்கிணைப்போடு காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சதுப்புநிலக்காட்டின் அழகை கண்டுகளிக்கும் வகையில் சுமார் 3 கி.மீ. தூரம் படகு சவாரி, கயாக்கின் எனப்படும் துடுப்பு படகு சவாரி, ஸ்நார்கிங் எனப்படும் தண்ணீருக்கு அடியிலுள்ள உயிரினங்களை கண்டுகளிப்பது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சூழல் மேம்பாட்டு குழுவினர் மூலம் தரமான சுவையுடன் கூடிய உணவு வகைகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்கள் விற்பனையும் மேற்கொள்ளப்படுகிறது.