ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், ராமேஸ்வரம் பகுதி சுற்றுலாத் தலம், ஆன்மிகத் தலம் என்பதால் யாத்திரிகள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் கரோனா நோய்த்தொற்றைக் கருத்தில்கொண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று (ஏப். 15) ராமேஸ்வரம் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுமேற்கொண்டார்.
ராமேஸ்வரம் பகுதியில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று அங்கே நகராட்சி, சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள், கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றனவா, அதேபோல நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உணவுப்பொருள்கள், மருந்துப் பொருள்கள் சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் சரியாக வருகைபுரிகிறார்களா, மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் எத்தனை ரயில் சேவை இயக்கப்பட்டுவருகின்றன என்பது குறித்தும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறார்களா எனவும் ஆய்வுமேற்கொண்டார்.