ராமநாதபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டில் 914 மிமீ மழை பெய்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 358 மிமீ அதிகம், இதனால் மூன்று ஆண்டுகளாக மாவட்டத்தில் நிலவிய வறட்சியான சூழல் நீங்கி நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக 1.27 லட்சம் ஹெக்டரில் நெல் விவசாயத்தை மேற்கொண்டனர்.
ராமநாதபுரத்தில் பெய்த மழையால் அங்குள்ள திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, நயினார்கோவில் ஆகிய பகுதிகளில் நெல் விளைச்சல் நல்லமுறையில் நடைபெற்று மகசூல் கிடைத்துள்ளது. ஆனால் கீழக்கரை தாலுக்கவிற்கு உட்பட்ட பகுதிகளில் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் 350 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது.
ஆனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் நிலத்தில் மழை நீர் தேங்கி அறுவடை செய்ய இயலாத சுழல் உள்ளது. இந்த மழை சூழ்ந்த பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம்கொண்டு அறுவடை செய்ய இயலாததால் 300 ரூபாய் கூலிக்கு ஆட்களை வைத்து அறுவடை செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் 1 ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டை வரை நெல் கிடைக்கும். தற்போது வெறும் 10 முதல் 15 மூட்டைகள் மட்டுமே நெல் கிடைப்பதாக தெரிவித்த விவசாயிகள் இதனால் மூன்று மாதம் விவசாயம் செய்தும் விவசாயத்திற்குரிய பலனில்லை என்று தெரிவித்தனர். இதுபோன்று திரு உத்தரகோசமங்கை பகுதியிலும் அதே சூழல் உள்ளது.