ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனோ வார்டுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு கரோனா சிகிச்சைக்கென பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மருத்துவ அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், “இந்தோனேசியா நாட்டிலிருந்து ராமநாதபுரத்திற்கு வந்த எட்டு பேர் கரோனோ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் 110 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது தேவைக்கேற்ப மேலும் 200 படுக்கைகள் தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த ஒரு மாத காலத்தில் 455 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.