இலங்கையின் திரிகோணமலையில் நேற்றிரவு கரையைக் கடந்த புரெவி புயல், தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே இன்று அல்லது நாளை கரையை கடக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், பாம்பன் பாலப் பகுதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்க போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், பாம்பன் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், மாநில பேரிடர் மீட்புக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், கண்காணிப்பு அதிகாரி டிபி யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.