ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிக்கு தினமும் எராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த நிலையில், ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று (அக்.19) கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, கனமழையின் காரணமாக கோயிலின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
இதனால் மூலவரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், கோயிலின் முக்கிய பிரகாரத்தினுள் மழைநீர் தேங்கியது. பருவ மழைக்காலம் தொடங்கும் போதெல்லாம் ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் புகுவது வாடிக்கையாகி உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.