ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது லாந்தை கிராமம். இப்பகுதியில் ரயில்வே துறையின் சார்பாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. சுமார் நான்கு ஆள் மட்டத்திற்கு மழைநீர் தேங்கியதால் நெடுஞ்சாலையுடனான லாந்தை வழியாகச் செல்லும் சின்னத் தாமரைகுடி, பெரியத்தாமரைகுடி உள்ளிட்ட ஆறு கிராமத்திற்கு போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக ரயில் பாதையில் மட்டுமே லாந்தை கிராமத்தை கடந்து செல்ல முடிகிறது. இப்பகுதியை இருசக்கர வாகனத்தில் கூட கடக்க முடியவில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்களான பால், சமையல் எரிவாயு, உணவு உள்ளிட்டவைகளை வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியாமல் கிராம மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து லாந்தை கிராமத்தை ஆய்வு செய்ய வந்த ரயில்வே, மாவட்ட அலுவலர்களுடன் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆண்டும் இதேபோல் வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கியது. அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மின் மோட்டார் உதவியுடன் மழை நீரை வெளியேற்றி ரயில்வே சுரங்கப்பாதையை சரி செய்து கொடுத்தார்.
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய உடனே ரயில்வே சுரங்கப்பாதை நிரம்பி உள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், ரயில்வே துறையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொலை செய்யப்பட்ட ரவுடி சுரேஷின் தலை கண்டெடுப்பு