கரோனாவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரையில் தான் கடைகளைத் திறந்துவைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விலக்கு அளிக்க்ப்பட்டுள்ளது.
மதுக்கடைகள், பார்கள் ஆகியவை கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மது அருந்த முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தி சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சும் வேலையில் இறங்கியுள்ளனர். இதனை எதிர்த்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்னும் சிலர் யூட்யூப்பில் வீடியோ பார்த்து சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் மீதும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டு தான் உள்ளன.
குடிமகன்களின் நிலைமை இப்படியிருக்க இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மதுவை முற்றிலுமாக தமிழ்நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும் என மது விலக்குக்காக நீண்ட நாள்களாகப் போராடுபவர்கள் அரசை வலியுறுத்துகின்றனர். இதனையே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வழிமொழிகின்றன.
இச்சூழலில் மதுவிலிருந்து விடுபட இந்த ஊரடங்கு உத்தரவு மிகச் சரியான நேரம் என்கிறார் மனநல மருத்துவர் பெரியார் லெனின். நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அவர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில் மதுவிலிருந்து விடுபடுவது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
எவ்வாறு மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வருவது?
மதுப் பழக்கத்திலிருந்து வெளிவர இதுவே மிகச்சிறந்த நேரமாக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவினால் அனைத்து மதுக் கடைகளையும் அரசு மூடியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மது அருந்துவோர் தாமாக முன்வந்து மனமாற்றத்தைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மது அருந்துவதால் நமது மனநிலை பாதிப்பதோடு வீட்டின் பொருளாதாரமும் மோசமாகும் என்பதனை உணர்ந்து மது பழக்கத்திலிருந்து வெளியே வரலாம்.
தீவிர மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கை நடுக்கம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். அதிலிருந்து விடுபட தேவையான அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. மருந்துகள் வேண்டுவோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி பெற்றுக் கொள்ளலாம். குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வரும் எண்ணம் கொண்ட அனைவரும் முன்வர வேண்டும்.
வீட்டிலேயே பெண்கள் இருப்பதால் அவர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கலைச் சமாளிப்பது எப்படி?
ஊரடங்கு உத்தரவினால் பெண்கள் வீட்டிலேயே தொடந்து சமையல் செய்வது, பாத்திரம் விளக்குவது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால் பெண்களுக்கு ஒரு விதமான உளவியல் சிக்கல் ஏற்படக் கூடும். இதனைச் சரிசெய்ய கணவர், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்தால் பெண்களின் மனச்சோர்வு குறைய வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் உளவியல் சிக்கலிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியும்.