ராமநாதபுரம்:பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிகிறார். அதாவது இன்று மாலை சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் கோலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கி வைத்துவிட்டு, பின்னர் ராமேஸ்வரம் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
அதற்காக இன்று மாலை சுமார் 4 மணிக்கு பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அதற்காக சென்னை முழுவதும் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரவு கிண்டி ராஜ்பவனில் தங்கும் மோடி, நாளை காலை சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பிரதமர் ஸ்ரீரங்கம் கோயில், ராமேஸ்வரம் கோயில் ஆகியவற்றில் தரிசனம் செய்ய உள்ளார்.
அதவாது, உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு, வரும் ஜன.22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக விரதம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முக்கிய புன்னிய ஸ்தலங்களான ராமேஸ்வரம், ராமநாத சாமி கோயிலில் வழிபடுவதற்காக வரும் ஜன.20ஆம் தேதி ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.
ராமேஸ்வரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு: ஜனவரி 20ஆம் தேதி இரவு ராமநாத சாமி கோயில் எதிரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் தங்கி, மறுநாள் (ஜன.21) தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்கிறார். இந்த 3 நாள் சுற்றுப்பயணத்தின் போது ராமேஸ்வரம் நகர் பகுதியில் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாத சாமி கோயிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நேரடி தரிசனம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி செல்லும் சாலைகளில் ஆயுதம் ஏந்திய போலீசாரைக் கொண்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையின் எதிரொலியாக வரும் ஜனவரி 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்கவும், இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் வருகை முன்னிட்டு பாதுகாப்புக்காக கூடுதல் டிஜிபி தலைமையில், மூன்று டிஐஜிகள், 14 எஸ்பிகள், 13 ஏடிஎஸ்பிகள், 25 டிஎஸ்பிகள் மற்றும் 3 ஆயிரத்து 400 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அன்னபூரணி திரைப்படம் விவகாரம்; மன்னிப்பு கோரிய நயன்தாரா..!