ராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதியில் இன்று (மே 28) அதிகாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது வரையிலும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் பணிக்கு செல்வோர், சிறு-குறு தொழிலாளர்கள், குழந்தைகள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஏற்கனவே மே 19ஆம் தேதி இதேபோல் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் இன்றும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதால் மின் வாரியம் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின் வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது ராமநாதபுரத்திற்கு வழுதூர், காவனூர் பகுதிகளில் இருந்துவரும் உயர் மின் கோபுரங்களின் வயர் அறுந்து விழுந்துள்ளது.
இதனால் ராமநாதபுரம் நகர் பகுதிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரமும் இதே பிரச்னை ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் தொடர்ந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் இருக்கும் நேரத்தில் மின் இணைப்பு இல்லாமல் வீட்டில் இருப்பது அனலில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மின் வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படாமல் இந்தப் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.