ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் மாந்திரீகம் என்ற பெயரில், பூமிக்கடியில் தங்கசிலைகள் இருப்பதாகவும், யாகம் நடத்தினால் பழமையான சிலைகள் கிடைக்கும் என, ஒரு கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனடிப்படையில், கமுதி தாலுகா பேரையூர் அருகே ஆனையூரில், சில வாரங்களுக்கு முன் யாகம் நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கு தங்க சிலைகளுக்கு பதிலாக, பழமையான சிலைகள் கிடைத்துள்ளன. பழமையான சிலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்ட அந்தக் கும்பல், கமுதி அருகே தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்து, விற்பனை செய்ய காத்திருந்தது.
இது குறித்து ராமநாதபுரம் எஸ்பி வருண்குமாருக்கு அவரது செல்ஃபோன் வாயிலாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உதவி எஸ்.பி., விவேக், டிஎஸ்பி ராஜேஷ் (முதுகுளத்துார்), மகேந்திரன் (கமுதி), ராமநாதபுரம் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திவாகர் ஆகியோர் விசாரித்துள்ளனர்.