பொதுமக்கள் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண காவல் நிலையங்களுக்கு செல்லவேண்டிய தேவை உள்ளது.
மனுக்கள் அளித்த பின்பு அது தொடர்பாக பல முறை காவல் நிலையம் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக மக்கள் அடிக்கடி காவல் நிலையம் வர வேண்டாம் என்று எண்ணிய இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காவல்துறையினர் நேரடியாகச் சென்று விசாரித்துத் தீர்வு காண உத்தரவிட்டார்.
அதன் பேரில், தினந்தோறும் மக்கள் அளிக்கும் புகாருக்குத் தீர்வு காணப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களும் புகார் மனுக்கள் மீதான விசாரணையை அவர்களின் இடத்திற்கே நேரடியாகச் சென்று நடத்தி நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறை நேற்று(அக்.7) தொடங்கியது. காவல்நிலையத்தில் பெறப்பட்டு மனுக்களை, சம்பந்தப்பட்ட காவலர், இருதரப்பினர் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.
இதையும் படிங்க:மகனிடமிருந்து சொத்தை மீட்டுத்தரக் கோரி வயது முதிர்ந்த தம்பதியர் கோரிக்கை!