ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, இசிஜி, பெண்கள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை, எலும்பு முறிவு, பல் மருத்துவம், சித்த மருத்துவப் பிரிவு, ரத்த வங்கி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு 37 வகை மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கும் வகையில் சிறப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், 64 படுக்கை வசதிகள் உள்ளன.
மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் என 48 பேர் பணியில் உள்ளனர். இங்கு நாள்தோறும் கமுதியைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். கரோனா பரவல் முதல் அலையின்போது, இங்கு அது தொடர்பான பரிசோதனையோ, சிகிச்சையோ மேற்கொள்ளப்படவில்லை. பேரையூர் தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 5 சுகாதார நிலையங்களில் மட்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதால், கமுதி அரசு மருத்துவமனையில் அதற்கான பரிசோதனைகள் கடந்த ஏப். 29ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தொற்று உறுதியான நோயாளிகள் 80 கி.மீ. தொலைவிலுள்ள ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கமுதி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தும் நோயாளிகள் அதிக தொலைவிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் நோயாளிகளும், அவர்களது உறவினா்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.