தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மாதங்களுக்குப் பின் ராமநாதசுவாமி கோயிலில் நீராட அனுமதி

ராமநாதபுரம்: 11 மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Permission to bathe in Ramanathaswamy Temple after 11 months
Permission to bathe in Ramanathaswamy Temple after 11 months

By

Published : Feb 2, 2021, 10:32 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி திருக்கோயில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்று மூன்று பெருமைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ராமேஸ்வரம், காசிக்கு அடுத்தபடியான ஆன்மிகத் தலமாக விளங்குகிறது.

இதன் காரணமாக ராமேஸ்வரத்திற்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகைதருகின்றனர். ராமேஸ்வரத்துக்கு வருகைதரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிவிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து. பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சில தளர்வுகள் அடிப்படையில் அரசுப் பேருந்துகள் ஜூன் ஒன்றாம் தேதிமுதல் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் தளர்வுகள் அடிப்படையில், வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் தீர்த்தமாடுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. இதனால் தீர்த்தம் இரைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சங்கு விற்பவர்கள், வாகன ஓட்டுநர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வேலை இழந்து வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்

இதன் காரணமாக, பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்திவந்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர் ராஜா, புரோகிதர்கள் யாத்திரை பணியாளர்கள் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இன்று (பிப். 2) காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித தீர்த்தங்களில் நீராடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details