ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைக்குட்பட்ட உப்பூரில், சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள், அதாவது 1600 மெகாவாட் உற்பத்தியில் அமையவுள்ளது. இதற்காக 912 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கடலினுள் 8 கிலோ மீட்டருக்கு மண்ணைக் கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்தப் பாலம் அமைக்கும் பணிக்கு உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சவுடு மணல் பயன்படுத்தப்படுவதாகவும், கழிவு மண்ணை கடலில் கொட்டி பாலம் அமைக்கப்பட்டுவதால் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும், இதில் பிடிக்கப்படும் மீனை மக்கள் வாங்க மறுத்துவிடுவார்கள் என்றும் அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். இதன்மூலம் கடல் வளம் மாசடைவதோடு, அரியவகை உயிரினம் அழியும், இதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு அளித்தனர்.