ராமநாதபுரம்:வழுதூர் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் இயற்கை எரிவாயு தோண்டி எடுக்கப்பட்டுவருகிறது. தற்போது புதிய திட்டமாக வீட்டுக்கு வீடு நேரடியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
முதற்கட்டமாக இங்கிருந்து தோண்டி எடுக்கப்படும் இயற்கை எரிவாயு ராமநாதபுரத்திலும், ராமேஸ்வரத்திலும் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்ப திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று செய்துவருகிறது.
இந்நிலையில் வாலாந்தரவை அடுத்த வழுதூர் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் இந்த இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்வதற்காகக் குழாய்கள் பதிக்கப்பட்டுவருகின்றன.
கோட்டாட்சியரிடம் முறையிட்ட மக்கள்
இந்தக் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுசெல்வதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோல செய்வதால் விபத்து நேரிட்டால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் இடர் இருப்பதாகக் கூறி தங்களது கிராமப் பகுதியில் இயற்கை எரிவாயு குழாய் பதிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி வழுதூர் கிராம மக்கள் ராமநாதபுரம் கோட்டாட்சியரைச் சந்தித்து முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், வழுதூர் கிராம மக்களையும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யவுள்ள தனியார் நிறுவன அலுவலர்களையும் நேரில் அழைத்து இது குறித்து விசாரணை நடத்தினார். விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் அளிப்பது எப்படி?